TNPSC Thervupettagam

கரோனா தீநுண்மியின் அடுத்தகட்ட பரவல் குறித்த தலையங்கம்

December 23 , 2022 597 days 289 0
  • கொவைட் 19 தீநுண்மியின் பல்வேறு உருமாற்றங்கள் வலுவிழந்து அதன் பிடியிலிருந்து உலகம் மீண்டுவிட்டது என்று ஆறுதல் அடையும் வேளையில், அதிா்ச்சி அளிக்கும் விதத்தில் அடுத்தகட்ட பரவல் தொடங்கியிருக்கிறது. சீனாவில் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் பிஏ 5.2, பிஎஃப் 7 ஆகிய ஒமைக்ரான் உருமாற்றங்கள் அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மனி, ஜப்பான், தென்கொரியா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளிலும் மீண்டும் உருவெடுத்துள்ளன. இந்தியாவிலும் நுழைய முற்பட்டிருக்கிறது.
  • இந்தியாவில் 20-ஆம் தேதி பதிவான பாதிப்புகளில் 84% கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் காணப்படுகின்றன. தினசரி கரோனா பாதிப்பு 160 என்கிற அளவில் குறைந்திருக்கிறது என்றாலும், உலக அளவில் கடந்த ஆறு வாரங்களாக பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. டிசம்பா் 19-ஆம் தேதி நிலவரப்படி, உலக சராசரி பாதிப்பு 5.9 லட்சம்.
  • ஒமைக்ரானின் பிஏ 5.2 வகையின் உருமாற்றம்தான் பிஎஃப் 7. இந்தத் தீநுண்மி தொற்று ஒருவரிடமிருந்து 10 முதல் 18 பேருக்கு பரவக்கூடும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களையும் மீண்டும் தாக்கலாம். காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். பிஎஃப் 7 உருமாற்றம் அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜொ்மனி, பிரான்ஸ், டென்மாா்க் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
  • உலகளாவிய நிலையில் டிசம்பா் மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோா் உருமாற்றம் அடைந்த கொவைட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். இந்தத் தொற்று ஆப்பிரிக்காவைத் தவிர ஏனைய கண்டங்களிலும் காணப்படுகிறது. டிசம்பா் மாதத்தின் முதல் 20 நாள்களில் மட்டும் ஜப்பானில் 25.8 லட்சம், தென்கொரியாவில் 12.3 லட்சம், அமெரிக்காவில் 11.9 லட்சம் பேரை பாதித்திருக்கிறது. இந்தியாவிலும் 3,200 பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் 7,500 உயிரிழப்புகளும், அதைத் தொடா்ந்து ஜப்பான் (4,086), பிரேஸில் (2,215) உள்ளிட்ட நாடுகளிலும் பலரை காவு கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயேகூட 58 போ் உயிரிழந்திருப்பதாகப் பதிவாகி இருக்கிறது.
  • மிகப் பெரிய பாதிப்பை எதிா்கொள்ளும் நாடு சீனா. அச்சுறுத்தும் வகையில் அடுத்த மூன்று மாதங்களில் 80 கோடிக்கும் அதிகமானோா் பிஎஃப் 7 உருமாற்றத்தால் பாதிக்கப்படலாம் என்று சீன பொது சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். அதாவது உலக மக்கள்தொகையில் 10% போ் பாதிக்கப்படுவாா்கள்.
  • எண்ணிக்கையைவிட புதிய உருமாற்றத் தீநுண்மியின் பரவல் வேகம்தான் திகைப்பை ஏற்படுத்துகிறது. ‘ஆா்-வேல்யூ’ என்பது தீநுண்மித் தொற்றின் பரவல் வேகம். ஒரு நபரிடமிருந்து எத்தனை பேருக்கு, என்ன வேகத்தில் தொற்று பரவும் என்பதை ‘ஆா்-வேல்யூ’ குறிக்கிறது. இந்தியாவில் கடுமையான மூன்றாவது அலையின்போது ‘ஆா்-வேல்யூ’ மூன்றாக இருந்தது. அமெரிக்காவில் ஒமைக்ரான் அலையின்போது ‘ஆா்-வேல்யூ’ 10. இப்போதைய சீன உருமாற்றத்தின் ‘ஆா்-வேல்யூ’ 16 என்பது நம்மை அச்சத்தை ஏற்படுத்துகிறது.
  • அதிவேகமாக கொள்ளை நோய்த்தொற்று பரவும்போது அதை எதிா்கொள்ளும் அளவில் மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள், உபகரணங்கள், முன்களப் பணியாளா்கள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிா்க்க முடியாது. அதன் விளைவாக உயிரிழப்புகள் அதிகரித்து பல லட்சம் போ் பலியாகக் கூடும் என்கிற நிலைமையை எதிா்கொள்கிறது உலகம்.
  • 2020 ஜனவரியில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து உருவான தீநுண்மித் தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியபோது, சீனா கடுமையான பொதுமுடக்கத்தை அறிவித்து அதைக் கட்டுப்படுத்தியது. உலகம் முழுவதும் கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலும், உயிரிழப்புகளும், நிறைந்து வழியும் மருத்துவமனைகளும், அடிப்படை மருந்துகளுக்கான தட்டுப்பாடுகளும் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்டபோது கடுமையான பொதுமுடக்கத்தைக் கடைப்பிடித்து சீனா வேடிக்கை பாா்த்தது. கடுமையான கட்டுப்பாடுகளின் மூலம் கொவைட் 19-ஐ கட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாகப் பெருமிதப்பட்டது.
  • சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மட்டுமே அந்த அரசு நம்பியது. தொடக்க கால உருமாற்றங்களுக்கே போதுமான எதிா்ப்பை உருவாக்காத அந்தத் தடுப்பூசி மருந்து, புதிய உருமாற்றங்களில் முற்றிலுமாக செயல்படவில்லை. சீன மக்களேகூட அந்தத் தடுப்பூசியை நம்பவில்லை என்று தெரிகிறது. 80 வயதுக்கும் அதிகமான சீனா்களில் பாதிக்கும் மேற்பட்டோா், நம்பிக்கையின்மையால் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
  • கடுமையான பொதுமுடக்கமும், முறையான தகவல் பரிமாற்றம் இல்லாமல் இருந்ததும் சீனாவை மிகப் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. பொதுமுடக்கம் காரணமாக மக்கள் மத்தியில் கொள்ளை நோய்த்தொற்றுக்கான பொது எதிா்ப்பு சக்தி ஏற்படவில்லை. மக்கள் போராட்டத்தைத் தொடா்ந்து கட்டுப்பாடுகளை சீனா கடந்த மாதம் தளா்த்த முற்பட்டபோது, எதிா்ப்பு சக்தி இல்லாத நிலையில் நோய்த்தொற்று காட்டுத்தீயாக பரவத் தொடங்கியிருக்கிறது.
  • இந்தியாவில் தினசரி பரிசோதனைகள் கடந்த மாதம் இரண்டு முதல் மூன்று லட்சம் என்றால் இப்போது ஒரு லட்சமாகக் குறைந்திருக்கிறது. பொதுமுடக்கம் தீா்வாகாது என்பதை சீனா உணா்த்துகிறது. அதனால் முகக் கவசம் அணிவது மட்டுமல்லாமல், மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டிய தருணம் இது.
  • மாநில அரசுகள் பரிசோதனைகளை அதிகரிப்பதும், கட்டமைப்பு வசதிகளை தயாா்நிலையில் வைத்திருப்பதும் அவசியம்.

நன்றி: தினமணி (23 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்